பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த
சரியான புரிதலையும் உருவாக்கும் வகையில் உலகப் புவி நாள் (World Earth
day), ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
1969-ம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய்
சிதறலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன், சாண்டா
பார்பராவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்ட
பிறகு, மனம் கொதிப்படைந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அவர் திரும்பினார்.
அதற்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதியைத் தேசியச் சுற்றுச்சூழல் நாளாக
அறிவிக்கும் மசோதாவை அவர் சமர்ப்பித்தார். 1970 முதல் அமெரிக்காவில் அது
அனுசரிக்கப்பட்டது.
நவீன சுற்றுச்சூழல் போராட் டத்தின் தொடக்கம் என்று இந்த நாளைக் கூறலாம்.
இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி
இலையுதிர் காலமாகவும் இருக்கும்.
யுனெஸ்கோ அங்கீகாரம்
இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ
மாநாட்டில் ‘எர்த் டே' எனப்படும் புவி நாளைக் கொண்டாடுவது பற்றி
அமைதிக்காகப் போராடிய ஜான் மெக்கோநெல் அறிவித்தார். 1972-ம் ஆண்டிலிருந்து
ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும்
தொடர்கின்றன.
1990-ம் ஆண்டு புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச்
சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உலகறியச் செய்ததன் மூலம், மறுசுழற்சி
முயற்சிகளுக்கு மிகப் பெரிய உத்வேகம் கிடைத்தது. அத்துடன் 1992-ம் ஆண்டு
ரியோடி ஜெனிரோவில் ஐக்கிய நாடுகள் சபை, பூமி குறித்து விவாதிப்பதற்காக
நடத்திய உலகளாவிய மாநாட்டுக்கும் இந்த முயற்சி அடிப்படையாக அமைந்தது.
பசுமை நகரங்கள்
2014 புவி நாளின் கருப் பொருள்: பசுமை நகரங்கள் (Green Cities). உலகில்
நகரங்களே பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பால் அதிக மக்கள் அவதியுறுவதும் நகரங்களில்தான். எனவே,
நகரங்களைக் கூடுமானவரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும், அதற்கு
சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வழிமுறை களைப் பின்பற்ற வேண்டு மென இந்தப்
புவி நாள் வலியுறுத்துகிறது. நாமும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான
நடைமுறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிக்கலாமே!
No comments:
Post a Comment