நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைந்து சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், மனிதர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாரம்பரிய உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சென்னை லயோலா கல்லூரியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஐம்பூத சுற்றுச்சுழல் திருவிழா நடத்தப்பட்டது.
பறை இசை முழக்கம்; தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான சிறுதானியங்களின் அணிவகுப்பு என கொண்டாட்டத்திற்கும் குதூகலத்திற்கும் பஞ்சமில்லாமல், சென்னையில் நடைபெற்றது ஐம்பூத சுற்றுச் சூழல் திருவிழா.
சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துச் செல்லும் வண்ணம் நடத்தப்பட்ட இந்த திருவிழாவில், தமிழர்களின் ஐம்பூத கோட்பாடுகள் குறித்து விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இதில், பிரத்யேகமான கருத்தரங்குகளும், காட்டுயிர் புகைப்பட கண்காட்சிகளும், இயற்கை உணவு பொருட்களின் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவுத் திருவிழாவும் இடம் பெற்றது.
அதிகளவில் பயன்பாட்டில் இல்லாமலுள்ள சிறுதானியங்களை வழக்கத்திற்கு கொண்டு வந்து, ஆரோக்கியமான மனித சமுதாயத்தை உருவாக்க ஐம்பூத திருவிழா உதவுவதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
பரபரப்பான வாழ்க்கையில், உடல் உபாதைகளை உண்டு செய்யும் உணவுகளை உட்கொள்ளாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவை உண்பது ஆரோக்கியமானது என்கின்றனர் இதில் கலந்து கொண்டவர்கள்.
பாரம்பரிய உணவுப் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விழாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், அழிந்து வரும் தமிழர்களின் உணவு வகைகளை பாதுகாப்பதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்க முடியும் என்கின்றனர் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்றவர்கள்.
No comments:
Post a Comment